இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு 1,226 இடங்கள் உள்ளன.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 313; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 533 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இப்படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக்குழு அலுவலகத்தில், அக்., 26ல் துவங்கி நேற்றுடன் முடிந்தது.
கவுன்சிலிங் முடிவில், அரசு மருத்துவக் கல்லுாரி களில் யுனானியில், 11 இடங்கள் உட்பட, அரசு ஒதுக்கீட்டில், 151 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில், 343 இடங்கள் என, மொத்தம், 494 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், அடுத்த வாரம் துவங்க உள்ளது. இரண்டு, மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் நிரம்பாவிட்டால், மீண்டும் புதிதாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, ஆயுஷ் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.