திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் வசிக்கும் பட்டியலின குடும்பங்கள் வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி நீண்ட காலமாக போராடி வந்தன. இதையடுத்து, லட்சிவாக்கம் அருகே பெரம்பூர் கிராம பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு நிலத்தில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, லட்சிவாக்கத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 43 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதற்கு பெரம்பூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தை தங்களது கிராமத்தின் வேறு திட்டத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததாக கூறி, போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பட்டியலின மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் குடிசைகள் அமைத்து வசிக்க தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பெரம்பூர் கிராம பகுதியில் குடிநீர் வழங்க ஏதுவாக, அங்குள்ள பம்ப் செட் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது.இதையடுத்து, பெரம்பூர் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர், பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த ஏடிஎஸ்பி மீனாட்சி, ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டதற்கும், குடிநீர் இணைப்பு வழங்க பள்ளம் தோண்டுவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு, பெரம்பூர் பாட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தில் மின் விளக்குகள் எரியாத வகையில், மின் மாற்றி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. எனவே, போலீஸார் லேசான தடியடி நடத்தி கிராம மக்களை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் போலீஸார் மீது கல் வீசினர். இதில், இன்ஸ்பெக்டர் சத்தியபாமா உட்பட 3 போலீஸார் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பெரம்பூர் கிராம மக்களின் போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நீடித்ததால், கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.
தொடர்ந்து, பெரம்பூர் கிராம பகுதியில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பெரம்பூர் கிராம மக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து, பட்டியலின மக்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.