ஐ.நா., வர்த்தக மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு அமைப்பு, கடந்த 2008ம் ஆண்டிலிருந்து, முதலீட்டு ஊக்குவிப்பு முகமைகள் வாயிலாக செயல்படுத்தப்படும், நிலையான வளர்ச்சி பணிகளை கண்காணித்து, விருது வழங்கி வருகிறது.
இந்தாண்டுக்கான விருது, காலநிலை மாற்றம் சார்ந்த துறையில் முதலீட்டை ஈர்த்து, கூட்டு முயற்சிகளில் புதுமையான அணுகுமுறைகளை செயல்படுத்திய, முதலீட்டை ஊக்குவிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் அந்த விருதுக்கு, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
அபுதாபியில் நடந்த எட்டாவது உலக முதலீட்டாளர் மன்ற மாநாட்டில், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்ணுவிடம், ஐ.நா., வர்த்தக வளர்ச்சி மாநாடு அமைப்பின் தலைவர் ரெபேக்கா கிரிஸ்பான் விருதை வழங்கினார்.
இதுகுறித்து, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா கூறுகையில், ‘ஐ.நா.,விடம் இருந்து கிடைத்த இந்த விருது, உலகளவில் அனைத்து துறைகளிலும் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது’ என்றார்.