திருச்சி மாவட்டத்தில், 300 கோடி ரூபாய் திட்டச் செலவில், தினமும், 100 டன் உற்பத்தித்திறனில், ‘டிஷ்யூ பேப்பர்’ தயாரிக்கும் ஆலையை அமைக்க, தமிழக அரசின் காகித நிறுவனம் முடிவு செய்து உள்ளது. டி.என்.பி.எல்., எனப்படும் தமிழக அரசின் செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு, கரூர் மாவட்டம், காகிதபுரத்தில், ஆண்டுக்கு, 4.40 டன் உற்பத்தித்திறனில், அச்சு மற்றும் எழுது காகிதம் தயாரிக்கும் ஆலை உள்ளது. இதுதவிர, திருச்சி, மணப்பாறை அருகில் மொண்டிப்பட்டி கிராமத்தில், ஆண்டுக்கு இரண்டு லட்சம் டன் திறனில் காகித அட்டை தயாரிக்கும் ஆலை உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், டிஷ்யூ பேப்பர் எனப்படும் திசு காகிதத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, அந்நாடுகளில் ஒரு தனிநபரின் டிஷ்யூ பேப்பர் பயன்பாடு, ஆண்டுக்கு 25 – 30 கிலோ என்றளவில் உள்ளது. நம் நாட்டில் வசதி படைத்தவர்கள் மட்டும் டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி வந்தனர். கொரோனா தொற்று பரவலுக்கு பின் தனிநபர்கள் சுகாதாரத்தை மேற்கொள்வது மிகவும் அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, டிஷ்யூ பேப்பர் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
அதேசமயம், இந்தியாவில், 10க்கும் குறைவான பெரிய நிறுவனங்கள் மட்டுமே, நல்ல முறையில் டிஷ்யூ பேப்பரை தயாரிக்கின்றன. எனவே, டிஷ்யூ பேப்பர் சந்தையில் களமிறங்க டி.என்.பி.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம், திருச்சி யில் உள்ள மொண்டிப்பட்டி காகித அட்டை தயாரிக்கும் ஆலைக்கு அருகில், தினமும், 100 டன் உற்பத்தித்திறனில் டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. திட்ட செலவு, 300 கோடி ரூபாய். அந்த ஆலையில், அதிநவீன இயந்திரங்கள் வாயிலாக, சர்வதேச தரத்தில், டிஷ்யூ பேப்பரை, 13 ஜி.எஸ்.எம்., முதல், 40 ஜி.எஸ்.எம்., வரை தயாரிக்கப்பட உள்ளது.
இதற்கு மூலப்பொருளாக டி.என்.பி.எல்., நிறுவனமே விளைவித்து தயாரிக்கும் மரக்கூழ் பயன்படுத்தப்படும். வரும், 2024 பிப்ரவரியில், டிஷ்யூ பேப்பர் ஆலை அமைக்கும் கட்டுமான பணியைத் துவக்கி, இரு ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.