நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம்: நாளை முதல் போக்குவரத்து தொடக்கம்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாகை துறைமுகம் அருகில் கடுவையாற்று முகத்துவாரத்தை தூர் வாரும் பணி நடைபெற்றது. மேலும், பயணிகளின் பாஸ்போர்ட்களை ஆய்வு செய்வது, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது, பயணிகள் கொண்டுவரும் உடமைகளைப் பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது போன்றவற்றை மேற்கொள்ள தனித்தனியாக அறைகளை உருவாக்கும் பணிகள் துறைமுகத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, துறைமுக வளாகத்தில், நாகை பயணியர் முனையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முற்பகல் `செரியாபனி பயணிகள் கப்பல்’ நாகை துறைமுகத்துக்கு வந்தது. தொடர்ந்து, நேற்று காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது. நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சோதனை ஓட்டமாகச் சென்ற செரியாபனி பயணிகள் கப்பலில், அதில் பணியாற்றும் 14 துறைமுக அதிகாரிகள் சென்றனர். நாகை லைட் ஹவுஸ்அருகில் கடற்கரையோரம் நின்றபடி, பயணிகள் கப்பல் செல்வதை பொதுமக்கள் ரசித்தனர். இன்றும் (அக்.9) சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (அக். 10) முதல் தொடங்குகிறது. இதனால், நாகை மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.