மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 2,000 கனஅடியாக குறைப்பு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் கர்நாடகா வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 154 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 139 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. நீர் இருப்பைக் கருத்தில்கொண்டு படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 4-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டாவுக்கான நீர்திறப்பு விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்தது. கடந்த 5-ம் தேதிவிநாடிக்கு 4,000 கனஅடியாகவும், 6-ம் தேதி 3 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று முன்தினம் 2,300கனஅடியாகவும், நேற்று மதியம்முதல் நீர் திறப்பு 2,000 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 31.72 அடி. நீர் இருப்பு 8.22 டிஎம்சி.