இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.30 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.30 சதவீதமாக இருக்கும் என, உலக வங்கி தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் முதலீடு மற்றும் உள்நாட்டு தேவையே இதற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சவாலான உலக பொருளதார சூழலிலும், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, மற்ற வளரும் பொருளாதாரங்களை விட வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் 6.30 சதவீதமாக இருக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சி, 2024 – 25 நிதியாண்டில் 6.40 சதவீதமாக உயரும்.
தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டு 5.80 சதவீதமாக இருக்கும். இது, உலகின் மற்ற வளரும் நாடுகளின் பிராந்தியத்தை விட அதிகமாகும்.மேலும் தெற்காசியா, உலக பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான புள்ளியாக விளங்குகிறது. அடுத்த சில ஆண்டுகளில், இப்பகுதி மற்ற வளரும் நாடுகள் பிராந்தியத்தை விட வேகமாக வளரும். உணவுப் பொருட்களின் விலை குறையத் தொடங்கியுள்ளதாலும், அரசின் நடவடிக்கைகளால் முக்கியமான பொருட்களின் வரத்து அதிகரித்திருப்பதாலும், இந்தியாவின் பணவீக்கம் வரும் காலங்களில் குறையும்.

குறைந்த அன்னிய கடன், நிதி மற்றும் பெரு நிறுவனங்களின் ஆரோக்கியமான நிதி நிலைமைகள் ஆகியவை, உலகளாவிய தேவை குறைதல், வட்டி விகிதங்கள் உயர்வு ஆகியவற்றின் பாதிப்பை குறைத்துவிடும்.
வெளிநாடுகளில் தேவை குறைவு காரணமாக சரக்கு ஏற்றுமதி குறைந்தாலும், வலுவான சேவைத்துறை ஏற்றுமதி இதனை ஈடுசெய்யும். இந்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள் கட்டுமானத் துறையில் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளன.

அரசின் கொள்கை முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்கவும் உதவும்.வங்கிகளின் கையிருப்பு மற்றும் பெரு நிறுவனங்களின் அந்நிய செலாவணி விகிதங்கள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக மேம்பட்டுள்ளன.மேலும், வங்கிகளின் வாராக் கடன்களின் அளவும் குறைந்துள்ளது. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் ஆரோக்கியமான அளவில் உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.