ஜாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக கட்சிகள் வலியுறுத்தல்

‘தமிழக அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அ.ம.மு.க., பொது செயலர் தினகரன்: கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டை, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எடுக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக, எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல், சமூக நீதி முழுமை அடையாது என்பதை உணர்ந்து, அதற்கான பணிகளை, உடனடியாக துவக்க வேண்டும். கோகுல மக்கள் கட்சி தலைவர் சேகர்: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, முதல்வர் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல் நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுகளை, மத்திய அரசு நடத்த வேண்டும்.

தமிழ்நாடு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக்கூட்டமைப்பு தலைவர் சேமநாராயணன்: சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் தமிழக முதல்வர், பீகார் அரசை பின்பற்றி, லோக்சபா தேர்தலுக்கு முன்பே, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்து வெளியிட வேண்டும். பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கடகிருஷ்ணன் தலைமையிலான ஆணையத்தை, அன்றைய கவர்னர் அலெக்சாண்டர் அமைத்தார். ஆனால், 1989ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அது ரத்து செய்யப்பட்டது. இது, சமூக நீதிக்கு செய்யப்பட்ட பெரும் துரோகம்.

அதை இப்போதாவது, தி.மு.க., அரசு சரி செய்ய வேண்டும். 13 கோடி மக்கள் கொண்ட பீஹாரில், 45 நாட்களில், 500 கோடி ரூபாயில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. எனவே, 7.64 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், குறைவான நாட்களில், குறைந்த செலவில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.