425 காலி பணியிடங்களுடன் எப்படி இயங்குகிறது

அண்ணா பல்கலை, 425 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், எப்படி செயல்படுகிறது என்பதற்கு பதிவாளர் விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010 -11ம் ஆண்டில், அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், ஒப்பந்த அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம், 20,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கு, அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, தங்களை நிரந்தரம் செய்யக் கோரியும், புதிய அறிவிப்பை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் தற்காலிக உதவி பேராசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்த போது பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

பொறியியல் கல்லுாரிகளை பொறுத்தவரை, அதுவும் அண்ணா பல்கலை போன்ற பல்கலை நடத்தும் கல்லுாரிகளில், நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும். யு.ஜி.சி., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளில், நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல், தொழில்நுட்ப வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை.

அண்ணா பல்கலையின் உறுப்புக் கல்லுாரி என்பதற்காக, விதிகளை மீற முடியாது. 12 முதல் 15 ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்வதில் என்ன சிரமம் உள்ளது என்பதற்கு, அண்ணா பல்கலை பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அண்ணா பல்கலை தரப்பில், ஆவணங்கள் மட்டும் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லாததால், அதிருப்தி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு பிறப்பித்த உத்தரவு:

ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு விதிகளின்படி, உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என, 1,745 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலை, 981 இடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கி உள்ளது. அதிலும், 556 பேர் தான் பணியில் உள்ளனர். எனவே, ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின்படி பார்த்தால், 1,189 இடங்கள் குறைவாகவும், அண்ணா பல்கலை ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் பார்த்தால், 425 இடங்களும், காலியாக உள்ளன.

இவ்வளவு காலியிடங்களை வைத்து, அண்ணா பல்கலையும், அதன் உறுப்புக் கல்லுாரிகளும் எப்படி இயங்குகின்றன என்பது தெரியவில்லை. 2010ல் இருந்து 2015 வரை, 372 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், நிலைமை மேம்படவில்லை. மூன்று ஆண்டுகள் தாமதமாக, சிண்டிகேட் கூட்டம் நடத்தியது ஏன் என்பதும் தெரியவில்லை. எனவே, அண்ணா பல்கலை ஒப்புதல் அளித்த வகையில் 425 காலியிடங்கள்; ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின்படி 1,189 இடங்கள் குறைவாகவும் வைத்து, எப்படி இயங்குகிறது என்பதற்கு, பல்கலை பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால், பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விசாரணையை, நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்