‘அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டண வசூலில் சுங்கச்சாவடிகள் குறி’ – உயர் நீதிமன்றம் அதிருப்தி

அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் சுங்கச்சாவடிகள் குறியாக இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த மகாராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு மற்றும் நாங்குநேரியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. கயத்தாறு பொன்னாகுடி செங்குளம் பகுதியிலும், நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு உட்பட்ட மூன்றடைப்பு பகுதியிலும் சுமார் 3 ஆண்டுகளாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 4 கி.மீட்டர் வரை கரடு, முரடான பாதையில் வாகனங்கள் செல்ல வேண்டியதுள்ளது. காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. சுங்கச்சாவடியில் பணிபுரியும் பலர் மீது குற்றவழக்குகள் உள்ளன. விதிமீறல் குறித்து கேள்வி எழுப்பினால் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி இருள் சூழ்ந்துள்ளது. இந்தக் குறைபாடுகளை சரி செய்யாமல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம். எனவே உரிய அடிப்படை வசதிகள் செய்யப்படும் வரை கயத்தாறு, நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”தேசிய நெடுஞ்சாலைத் துறை சாலைகளை முறையாக பராமரிப்பது இல்லை. சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. ஒரே இடத்தில் 14 விபத்துக்கள் நடந்துள்ளன. மனு குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.