நாட்டை சிதைக்க நினைப்பவர்களே சனாதனத்துக்கு எதிராக பேசுகிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள பலிமார் மடத்தில் உடுப்பி ஸ்ரீவித்யாதீஷ தீர்த்த சுவாமிகளின் 45-வது சாதுர்மாஸ்ய விரதத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. `சனாதன உற்சவம்’ என்றதலைப்பில் நடந்த இந்த விழாவில்தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிகலந்து கொண்டு பலிமார் மடத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேசியதாவது: நமது நாட்டில் ஆன்மிகவாதிகள் சென்ற இடமெல்லாம் புண்ணிய பூமியாக மாறியுள்ளன. சனாதனத்தை ஜி20 என்ற பெயரில் இரு வாரங்களாக உலக நாடுகள் டெல்லியில் கொண்டாடின. உலகளவில் அனைவருக்கும் சனாதன தர்மத்தை எடுத்துச் செல்ல வேண்டும். சனாதன தர்மத்துக்கு தொடக்கமும் முடிவும் இல்லை. சனாதன தர்மம் நிலைத்து நிற்கரிஷிகள், முனிவர்கள் போன்றோரின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்துள்ளது.
சனாதனத்தின் அடிப்படை அத்தியாயம் நம் வேதங்களில் உள்ளது. ரிஷிகள், முனிவர்கள் வாழ்வியல் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு அதை தந்துள்ளனர். நமது பாரத தேசம் எந்த ஒரு ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை. இது ஒரு தனித்துவமான நாடு. இதை ஐரோப்பிய அரசியல் சிந்தனை கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாது. பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். சனாதனத்தில் எல்லாம் உள்ளது. நவீன கல்வியை பெற்றவர்களாலும் பாரதத்தை புரிந்து கொள்ள முடியாததாலேயே இந்தியா என அழைத்தனர். ஆனால்அரசமைப்புச் சட்டத்தின் முதல்இடத்திலேயே இந்தியாவை பாரதம் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். `பாரத்’ என்பது சனாதனதர்மத்தின் எடுத்துக்காட்டாக உள்ளது. சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு இருக்கிறது. சனாதனம் தொடர்பான 1 லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. உத்திரமேரூர், மானூர் போன்ற பல்வேறு இடங்களில் அதனை பார்க்கலாம். எனவே, சனாதனத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது. அது, மண்ணோடும், மக்களோடும் நெருக்கமாக உள்ளது. சனாதன தர்மம் உலகத்தின் தேவையாக உள்ளது.
யாரெல்லாம் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்களோ அவர்கள் இந்த நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.