ஆதார் நம்பகத்தன்மை குறித்த மூடீஸ் கருத்துக்கு மறுப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் முதலீட்டுச் சேவை நிறுவனமான, ‘மூடீஸ்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், நம் நாட்டில் மக்களுக்கு வழங்கப்படும் ஆதார் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. ஆதார் வாயிலான சேவைகள் மறுக்கப்படுவது அடிக்கடி நடப்பதாகவும், கடும் வெயில் மற்றும் குளிர் நிலவும் நேரத்தில் தொழிலாளர்களின் கைவிரல் பதிவு உள்ளிட்டவை முறையாக செயல்படுவதில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆதார் தகவல்கள் சேகரிக்கும் நடைமுறை, தனிநபர் தகவல் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகளை, ஆதார் சேவை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது. நாடு முழுதும், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் அடையாள முறையை, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் பாராட்டியுள்ளன. பல உலக நாடுகளும், ஆதார் செயல்பாடு தொடர்பாக விசாரித்து வருகின்றன. இந்த விஷயத்தில் மூடிஸ் நிறுவனம் கூறியுள்ள கருத்துகள் முற்றிலும் தவறானவை; ஆதாரமற்றவை. எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக குறைகள் கூறப்பட்டுள்ளன.

ஆதார் இணையதளத்தில் உள்ள தகவல்களை வைத்து, தனக்கேற்ப ஒரு அறிக்கையை மூடிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. ஆதார் சேவைகளுக்கு, கைவிரல் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமில்லை. கண் விழி, முகம், மொபைல்போனில் ஒருமுறை பெறும் கடவு எண் போன்றவை வாயிலாகவும் ஆதார் சேவையை பெற முடியும். ஆதார் தகவல்கள் முழுதும் பாதுகாப்பானவை. அவற்றை தவறாக பயன்படுத்த முடியாது. அந்தத் தகவல்களை திருடவும் முடியாது. பலகட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆதார் சேவையில் உள்ளன.