விழுப்புரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை திறப்பதில் சிக்கல்

கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து, நான்கு வழிச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திட்டமிட்டப்படி திறப்பதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையிலான, 194 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையை 6,431 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் விழுப்புரம் – புதுச்சேரி ; புதுச்சேரி – கடலுார் ; கடலுார் – சிதம்பரம்; சீர்காழி சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் என நான்கு பிரிவாக நடந்து வருகிறது.

இதில், விழுப்புரம் – புதுச்சேரி இடையில் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. விடுபட்ட பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிப்பதற்கு திட்டமிட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆனால், கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் அரைகுறையாக நிற்பதால் திறப்பு விழாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் – புதுச்சேரி இடையிலான நான்கு வழிச்சாலை பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும், இந்த சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி அர்ப்பணிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கண்டமங்கலம் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் முடியவே, வரும் ஜூன் மாதமாகி விடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ‘நகாய்’ மற்றும் ரயில்வே அதிகாரிகளின் மெத்தனத்தால், விழுப்புரம் – புதுச்சேரி இடையிலான நான்கு வழிச்சாலையை, வரும் ஜனவரியில் பிரதமர் திறந்து வைப்பார் என்ற அறிவிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்கு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், புதுச்சேரி அரசும், ரயில்வே அதிகாரிகளும் கைகோர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்