மின் வாரியத்திற்கு ஜப்பான் தரவிருந்த ரூ.1000 கோடி போச்சு

மின் வாரியத்தின் கோரிக்கையை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் நிராகரித்துள்ளது. இதனால் அந்நிறுவனம் வழங்க முன்வந்த 1000 கோடி ரூபாய் கடன் தொகையை மின் வாரியமே ஏற்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. தமிழக மின் வாரியம் 400 கிலோ வோல்ட் திறனில் ஐந்து; 230 கி.வோ. திறனில் 14 துணைமின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்தது. மொத்த திட்ட செலவு 5014 கோடி ரூபாய். இதற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் மிக குறைந்த வட்டியில் 3572 கோடி ரூபாய் கடன் வழங்க 2012 செப். 28ல் ஒப்புதல் அளித்தது. மீதி மின் வாரியத்தின் நிதி. துணைமின் நிலைய கட்டுமான பணி 2014 – 15ல் துவங்கியது.

 

அந்த பணிகளை முடிப்பதற்கு ஏற்ப மின் வாரியம் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து ஒவ்வொரு பகுதியாக கடன் தொகையை பெற்று வந்தது. இந்தாண்டு ஜூலை 23க்குள் மொத்த பணிகளையும் முடித்து கடன் தொகை முழுவதையும் பெற வேண்டும். சென்னையில் உள்ள கொரட்டூர் கிண்டி துணைமின் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் ஏற்கனவே பெற்ற கடன் தொகை போக ஜூலைக்குள் 1000 கோடி ரூபாய் கடனை ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து மின் வாரியத்தால் வாங்க முடியவில்லை. அதை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு ஜப்பான் நிறுவனத்திற்கு மின் வாரியம் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்தக் கடனுக்கு இணையான தொகையை தமிழக அரசு அல்லது மின் வாரியம் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.