”விளையாட்டில் நம் நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது,” என, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் பேசினார். கோவை, குனியமுத்துார் ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி வளாகத்தில், 18 கோடி ரூபாய் செலவில் பகல், இரவு ஒளி விளக்குடன் கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் வலைப்பயிற்சி மைதானங்கள், செயற்கை புல்தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச தரத்தில், 400 மீட்டர், ‘சிந்தடிக் டிராக்’ அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ”விளையாட்டில் நம் நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. படிப்புடன் விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் கொள்ள வேண்டும். ”உடல், மனம் ஆரோக்கியத்திற்கு விளையாடுவது மிகவும் அவசியம். விளையாட்டு மைதானம் நட்பை வளர்க்கும் இடமாகவும் இருக்கும்,” என்றார். கல்வி நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில், இத்தகைய மைதானங்களை அமைக்க முன்வர வேண்டும். இதனால், நம் நாட்டில் இருந்து அதிகளவில் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவர்.
இதனால், நம் நாட்டை விளையாட்டில் வெல்ல யாராலும் முடியாது. விளையாட்டை மேம்படுத்த நாடு முழுதும், 1,000 மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. சீனாவில் துவங்கியுள்ள ஆசிய விளையாட்டு போட்டியில், அருணாச்சல பிரதேச மாநில வீரர்களை அனுமதிக்காதது பாரபட்சமானது. இதை கண்டித்தே நான் அங்கு செல்லவில்லை. அருணாச்சல பிரதேசம் நம் நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. தனிப்பட்ட பகுதி அல்ல. நான் அம்மாநில வீரர்களுக்கு ஆதரவாக நிற்பேன். இக்கல்லுாரி மைதானத்தில் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தவும் வாய்ப்பு அளிக்கப்படும்.மாநிலத்தில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தினால், ரஞ்சி, துலீப் டிராபி கிரிக்கெட் போல பிற போட்டிகளும் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.