எல்லை சாலை பணியாளர்கள்: மத்திய அரசு புதிய திட்டம்

எல்லை சாலைப் பணியில் ஈடுபடும்போது உயிரிழக்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் உடல்கள், அரசின் செலவில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு, நம் நாட்டின் எல்லைகளில் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மிகவும் கடினமான நிலப்பரப்பு, சீதோஷ்ண நிலையில் தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.

எல்லையில் பணியில் ஈடுபடும்போது, இயற்கையாக உடல்நலம் பாதிப்பு, விபத்து காரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின் உடல்கள், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான செலவை அரசே ஏற்கும் என, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: எல்லையோர பகுதிகளில் நடக்கும் பணியின்போது உயிரிழக்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் உடல்கள், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும். தொழிலாளர்கள் நலனை கருதி இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோல, இந்தத் தொழிலாளர்களின் இறுதிச் சடங்குக்காக வழங்கப்படும் உதவித் தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.