மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர், விவசாயிகளின் நலனை மையமாகக் கொண்டு வேளாண் கடன் மற்றும் பயிர்க் காப்பீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான மாற்ற நடவடிக்கைளை இன்று தொடங்கி வைக்கின்றனர். விவசாய கடன் மற்றும் பயிர் காப்பீட்டை மையமாகக் கொண்டு இந்த முன்முயற்சிகள் தொடங்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இந்தியாவில் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்த இந்த முன்முயற்சிகளைத் தொடங்குகிறது, மேலும் அனைவருக்குமான நிதி சேவைகளை அதிகரிப்பது, தரவு பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் சிறப்பம்சங்கள்:
1.கிசான்ரின் தளம் (கேஆர்பி): பல அரசுத் துறைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கிசான் ரின் இணையதளம் (கேஆர்பி), கிசான் கடன் அட்டை (கே.சி.சி) தொடர்பான சேவைகளுக்கான அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும். இந்த டிஜிட்டல் தளம் விவசாயிகளின் தரவுகள், கடன் வழங்கல் விவரங்கள், வட்டி மானிய கோரிக்கைகள் மற்றும் திட்ட முன்னேற்றம் ஆகியவை தொடர்பான விரிவான தகவல்களை வழங்கும். மேலும் விவசாய கடனுக்காக வங்கிகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை இது ஊக்குவிக்கும்.
2.இல்லம் தோறும் கே.சி.சி இயக்கம்: இந்த இல்லம் தோறும் கே.சி.சி இயக்கம், கிசான் கடன் அட்டைத் (கே.சி.சி) திட்டத்தின் நன்மைகளை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் கொண்டு செல்லும் லட்சிய இயக்கமாகும். இந்த இயக்கம் உலகளாவிய நிதி உள்ளடக்கத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நபார்டு வங்கி இந்த இயக்கத்தின் முதன்மை செயலாக்க அமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது, இது திட்டத்தின் ஒட்டுமொத்த செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு பொறுப்பை மேற்கொள்ளும்.
- விண்ட்ஸ் (WINDS) கையேடு வெளியீடு:இந்த நிகழ்ச்சியின்போது வெளியிடப்படவுள்ள விண்ட்ஸ் கையேடு, வானிலை தகவல் கட்டமைப்புத் தரவு அமைப்பு (விண்ட்ஸ்) முன்முயற்சியை விரிவுபடுத்துகிறது. விண்ட்ஸ் முறையில், மேம்பட்ட வானிலை தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி வானிலை குறித்த துல்லியமான தகவல் வழங்கப்படுகிறது. இந்த விரிவான கையேடு விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, இணையதள செயல்பாடுகள், தரவு விளக்கம் போன்றவை பற்றிய ஆழமான புரிதலை வழங்குகிறது.
இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சி விவசாயிகளின் செழிப்பிற்கான மத்திய அரசின் அர்ப்பணிப்பைக் குறிப்பதுடன் விவசாயிகளுக்கு திறம்பட்ட முறையில் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது. இதுபோன்ற முன் முயற்சிகள் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு உதவுவதுடன் நிலையான பொருளாதார வளர்ச்சியின் இலக்கை முன்னெடுத்துச் செல்ல உதவும்” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.