நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) செல்ல இருக்கிறோம். விநாயக பெருமானுக்கு ‘விக்னஹர்தா’ என்றும் பெயர், இனி இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்த தடையும் இருக்காது. பழைய வருத்தங்கள், புகார்களை புறந்தள்ளி உற்சாகத்துடன் புதிய நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். இது ஒரு குறுகிய அமர்வு. ஆயினும் எம்.பி.க்கள் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும். அதிகபட்ச நேரத்தை ஒதுக்க வேண்டும். அனைவரும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை தர வேண்டும். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும்
சந்திரயான்-3 விண்கலம் இந்திய மூவர்ண கொடியை நிலவில் நிலைநாட்டி உள்ளது. இதுபோன்ற சாதனையை நிகழ்த்தும்போது, அது நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது.இந்த வெற்றியின் மூலம் பல வாய்ப்புகளும், சாத்தியங்களும் இந்தியாவின் கதவுகளை தட்டுகின்றன.
ஜி20 உச்சி மாநாடு வெற்றியின் மூலம் உலக அளவில் தென்பிராந்தியத்தின் குரலாக இந்தியா மாறி இருக்கிறது. பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ஜி20 மாநாடு நடைபெற்று உள்ளது. ஏழை நாடுகளின் குரலை பிரதிபலித்ததில் பெருமைப்படுகிறேன். அனைத்து நிகழ்வுகளும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை எடுத்துக்காட்டுகின்றன.
புதிய நாடாளுமன்றத்தில் இருந்து பயணத்தை முன்னெடுத்து செல்லும் போது 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக வரும் காலத்தின் அனைத்து முடிவுகளும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.