பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன்படி, இனி ஆதார், கல்வி நிறுவனங்களின் அட்மிஷன், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, திருமண பதிவுமற்றும் அரசு வேலை நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒற்றை ஆவணமாக இனி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பிறப்பு-இறப்பு சட்டத் திருத்தம் என்பது தேசிய மற்றும் மாநில புள்ளிவிவரங்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுச் சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதுடன் செயல்திறனையும் அதிகரிக்க முடியும். மேலும், டிஜிட்டல் பதிவு மூலம் சமூக நலன்களை வழங்குவதற்கும் இந்த சட்டத்திருத்தம் உதவும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த சட்டம் 2023 மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.கடந்த ஆகஸ்ட் 1-ல் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சட்டத்திருத்தத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய தரவுத் தளத்தை பராமரிக்க இந்திய பதிவாளர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தலைமைப் பதிவாளர்கள் (மாநிலங்களால் நியமிக்கப்பட்டவர்கள்) மற்றும் பதிவாளர்கள் (உள்ளூர் பகுதிகளுக்கு மாநிலங்களால் நியமிக்கப்பட்டவர்கள்) பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளை தேசிய தரவுத்தளத்துடன் பகிர்வதற்கு பொறுப்பாவார்கள். ஒவ்வொரு மாநிலமும் இதேபோன்ற தரவுதளத்தை மாநில அளவில் பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.