ஹரியானாவின் நுாஹ் பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், காங்கிரஸ்
எம்.எல்.ஏ., மம்மன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கையாக நுாஹ் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; இணைய சேவை நிறுத்தப் பட்டுள்ளது.ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள நுாஹ் மாவட்டத்தில், ஜூலை 31ல், வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
அப்போது, வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். இதில், ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பெரோஸ்புர் ஜிர்க்கா தொகுதியில் எம்.எல்.ஏ.,வான காங்.,கைச் சேர்ந்த மம்மன் கான் உட்பட, 52, பேர் மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வரும்படி, இரண்டு முறை சம்மன் அனுப்பியும் மம்மன் கான் ஆஜராகவில்லை.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், மம்மன் கான் உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. கைது நடவடிக்கைகள் எடுப்பதற்கு தடை கோரி, அவர் தாக்கல் செய்ய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குருகிராமில் உள்ள வீட்டில் இருந்து மம்மன் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், நுாஹ் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றும், இன்றும் அங்கு இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.