கோழிக்கோடு: கேரளாவில், 39 வயது நபருக்கு நிபா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் வாயிலாக, தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று
வருவோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோருடன் நேரடி தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் சமீபத்தில் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 30ம் தேதி உயிரிழந்த நபரின், 9 வயது மகன், 24 வயதான மைத்துனர் உட்பட இருவருக்கு தொற்று உறுதியானது.
அதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இளைஞருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று நடந்த பரிசோதனையில், 39 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை ஆறாக உள்ளது. அதில் இருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது.
அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: தொற்று உறுதி செய்யப்பட்ட நபர், வேறு சில உடல் நலக் கோளாறுகளுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதே மருத்துவமனையில் தான், கடந்த மாதம், 30ம் தேதி நிபா வைரசால் உயிரிழந்த நபரும் சிகிச்சை பெற்றுள்ளார். அவரிடம் இருந்து தான் இவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சிகிச்சை பெற்று வரும் 9 வயது சிறுவன் உட்பட அனைவரது நிலையும் சீராக உள்ளது. சிறுவனுக்கு செயற்கை சுவாச கருவி வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தோருடன் நேரடி தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக இரண்டு இடங்கள் உள்ளன. அதை தவிர ராஜிவ் காந்தி உயிரிதொழில்நுட்ப மையத்தின் நடமாடும் பரிசோதனை கூடம் உள்ளது. அதில் உள்ள இரண்டு இயந்திரங்களில் ஒரே நேரத்தில், 96 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள வசதி உள்ளது.
இது தவிர, புனேவின் தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தின் நடமாடும் பரிசோதனை வாகனமும் கோழிக்கோடு வந்தடைந்துவிட்டது. மத்திய அரசின் ஐந்து நபர் அடங்கிய நிபுணர் குழுவினரும் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுக்கு அவர்கள் உதவி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.