‘இண்டியா’ கூட்டம் நடைபெறும் நாளில் அபிஷேக் பானர்ஜி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 2016-ல் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் அண்ணன் மகனும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் சரத் பவார் இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் அபிஷேக் பங்கேற்கவுள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அபிஷேக் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவில் நான் உறுப்பினராக இருக்கிறேன். இக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெறும் நாளில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி மீதான அச்சமே இதற்கு காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி மனு தாக்கல் செய்தார். ஆனால் இவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.