இந்திய மண்ணில் கால்பதிக்க அந்நியர்களை அனுமதிக்க மாட்டோம்

இந்திய மண்ணில் கால்பதிக்க அந்நியர்களை அனுமதிக்கமாட்டோம் என ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதி உபேந்திரா தெரிவித்துள்ளார். ஜம்மு நகரில் உள்ள ஐஐடி-யில் 3 நாள் வடக்கு தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு நடுவே இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா துவிவேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானை ஒட்டி உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சீனாவை ஒட்டி உள்ள உண்மையான எல்லைக் கோடு பகுதிகளில் எத்தகைய சவால்களையும் சந்திக்க நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். லடாக் பகுதியில் நிலைமை சீராகஉள்ளது. ராணுவ வடக்கு பிரிவு தளபதி என்ற வகையில் என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், இந்திய மண்ணில் அந்நியர்கள் யாரையும் அனுமதிக்க மாட்டேன்.

பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ சுமார் 200 தீவிரவாதிகள் தயாராக உள்ளனர். ஆனால் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மிகவும் விழிப்புடன் உள்ளனர். மேலும் அவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்கவும் முயற்சி செய்து வருகிறோம். கடந்த 9 மாதங்களில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட 46 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் 37 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தான் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்தாலும், இந்தியாவில் அமைதியைசீர்குலைப்பதற்காக தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதை நமது வீரர்கள் முறியடித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் லடாக் பகுதியில் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, “கிழக்கு லடாக் பகுதியில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால் சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி பொய் கூறுகிறார்” என கூறியிருந்தார். இந்த மாநாட்டில் பங்கேற்ற லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் பி.டி.மிஸ்ராவிடம் ராகுல் காந்தியின் கருத்து குறித்துகேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “ராகுல் காந்தியின் கருத்துக்கு நான் பதில் அளிக்கப்போவதில்லை. ஆனால், இங்கு நிலவும் உண்மை நிலவரம் குறித்து கருத்து கூறுகிறேன். லடாக் பகுதியில் ஓர் அங்குல நிலத்தைக்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்பதுதான் உண்மை” என்றார்.