செந்தில் பாலாஜி நிலைமை உதயநிதிக்கும், ராஜாவுக்கும் வரும்

”இந்தியாவில் அனைத்து மக்களையும் உள்ளடக்க கூடிய தர்மமாக, சனாதன தர்மம் உள்ளது; செந்தில் பாலாஜிக்கு என்ன நடந்ததோ, அதுதான் அமைச்சர் உதயநிதிக்கும், ராஜாவுக்கு நடக்கும்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக அமைச்சரவையில் இருந்து, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபுவை நீக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகே நடந்தது.

இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, கரு.நாகராஜன் உட்பட, 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, அண்ணாமலை பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 1,000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை, 44,000. குல தெய்வ கோவில் உட்பட தமிழகத்தில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. தமிழகத்தில் யார் கும்பாபிஷேகம் செய்தாலும், அரசு கணக்கில் சேர்த்துக் கொள்கிறது. கோவில்கள் வாயிலாக வரக்கூடிய வருமானம், 400 கோடி ரூபாயை தாண்டவில்லை.

தமிழக அரசு, அறநிலைய துறையை விட்டு வெளியேற வேண்டும். கோவில் சொத்துக்களை ஒழுங்காக நிர்வாகம் செய்தால், 5,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். கோவில் சொத்துக்களை தி.மு.க.,வினருக்கு குறைந்த வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த போராட்டத்துடன், இது முடிய போவதில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உதயநிதிக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது. அவர் சனாதன தர்மத்தை, ‘கொசு, டெங்கு, மலேரியா’ என்று கூறுகிறார். ராஜா, ‘எச்.ஐ.வி., தொழு நோய்’ என்று பேசுகிறார்.

ஆட்சியில் இருக்கும் வரை, தமிழக காவல் துறை தங்கள் மீது வழக்கு பதியாது என்று, அவர்களுக்கு தெரியும். செந்தில் பாலாஜிக்கு என்ன நடந்ததோ, அதுவே உங்களுக்கும் நடக்கும். ஆட்சி மாறும்; நாங்கள் கொடுத்த புகார் எப்போது வேண்டுமானாலும், முதல் தகவல் அறிக்கையாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, அண்ணாமலை, தொண்டர்களுடன் அறநிலைய துறை அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றார். சிறிது துாரம் சென்ற நிலையில், தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. உடனே, சாலையில் அமர்ந்த அண்ணாமலை, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. பின், போலீசார் பேச்சு நடத்தியதும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலைந்து சென்றனர். இப்பிரச்னையால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.