75 லட்சம் கிராம பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற திட்டம்

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்க (டிஏஒய்-என்ஆர்எல்எம்) திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய 75 லட்சம் கிராமப்புற பெண்களை நடப்பு 2023-–24 நிதி ஆண்டில் லட்சாதிபதிகளாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் வகையில் வழிவகை செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘‘சுய உதவிக் குழுவில் சுமார் 10 கோடி பெண்கள் இடம்பெற்றுள்ளனர். நீங்கள் ஒரு கிராமத்துக்கு சென்றால் அங்கு அங்கன்வாடி, மருந்து, வங்கி என அனைத்து பிரிவிலும் பெண்களை பிரதிநிதிகளாக காணலாம். இந்திய கிராமங்களில் 2 கோடி லட்சாதிபதிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது கனவு” என்றார்.

என்ஆர்எல்எம் தரவுகளின்படி, இதுவரை 9.5 கோடி பெண்கள் 87.4 லட்சம் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர். 2013-–14ல் இருந்து இதுவரை சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.6.96 லட்சம் கோடி வங்கி கடன் பெறப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக இதில் வாராக் கடன் என்பது 1.88 சதவீதம் அளவுக்கே உள்ளது. இந்த நிலையில், 2023–-24-ல் சுய உதவிக்குழுக்களில் 75 லட்சம் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.