பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலகுகிறோம் சீன பிரதமரிடம் தெரிவித்தார் இத்தாலி பிரதமர் மெலோனி

ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஆசியாவை சாலை மற்றும் கடல் மார்க்கமாக இணைக்க பெல்ட் அன்ட் ரோடு (பிஆர்ஐ) திட்டம் செயல்படுத்தப்படும் என சீனா அறிவித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இத்தாலி மட்டுமே கடந்த 2004-ம் ஆண்டு பிஆர்ஐ திட்டத்தில் இணைந்தது. இந்த சூழ்நிலையில், சீனாவுடனான பிஆர்ஐ ஒப்பந்தம், எங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலி வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தார். இதுபோல, பிஆர்ஐ திட்டத்தில் இணைந்தது மிகப்பெரிய தவறு என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அவ்வப்போது கூறி வந்தார்.

இந்த சூழ்நிலையில், ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் சீனா சார்பில் அந்நாட்டு பிரதமர் லி கியாங் பங்கேற்றார். இந்த மாநாட்டுக்கு நடுவே லி கியாங்கும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியும் சந்தித்துப் பேசினர். அப்போது, பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக மெலோனி தெரிவித்துள்ளார். இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கியாங் விடுத்த வேண்டுகோளை ஏற்க மெலோனி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் 3-வது கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெறும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், இத்தாலியின் இந்த முடிவு ஜி ஜின்பிங்குக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதுபோல பிஆர்ஐ திட்டத்திலிருந்து விலக மேலும் சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.