ஜி-20 உச்சி மாநாட்டில் மேற்கத்திய நாடுகளின் சதி அரசியலை முறியடித்த இந்தியாவுக்கு நன்றி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

ஜி-20 உச்சி மாநாட்டில் மேற்கத்திய நாடுகளின் சதி அரசியலை வெற்றி கரமாக முறியடித்த இந்தியாவுக்கு நன்றி என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர்க் குற்ற வழக்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது. இதன்காரணமாக ரஷ்ய அதிபர் புதின் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அவர் காணொலி வாயிலாகவே பங்கேற்றார்.

இந்த சூழலில் டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்று அதிபர் புதின் இரு வாரங்களுக்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடியிடம் வருத்தம் தெரிவித்தார். ரஷ்யாவின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த பிரகடனத்தில், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நாட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வார்த்தைகளை பிரகடனத்தில் பயன்படுத்த இந்தியா விரும்பவில்லை. உக்ரைன் போரில் ஆரம்பம் முதலே இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இது போருக்கான காலம் கிடையாது என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகவே எடுத்துரைத்தார். இதே கருத்தை ஜி-20 உச்சி மாநாட்டிலும் இந்தியா வலியுறுத்தியது.

மாநாட்டின்போது ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேசினார். அவரது ராஜதந்திர நடவடிக்கைகளால் ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிடாமல் டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. அதேநேரம், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் அறிவுரை வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ் டெல்லியில் கூறியதாவது: டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் சதி அரசியலில் ஈடுபட முயற்சி செய்தன. ஆனால் பிரிக்ஸ் கூட்டணி நாடுகளான பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவை ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டன. மேற்கத்திய நாடுகளின் சதி அரசியலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. அதற்காக ரஷ்யாவின் சார்பில் இந்தியாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதை புதிய மைல் கல்லாக கருதுகிறோம். சர்வதேச அளவில்பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். உலக பொருளாதார தேக்கநிலை, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஜி-20 அமைப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு செர்கே லாரவ் தெரிவித்தார்.