தீர்க்கமான தலைமை மோடி; சர்வதேச தலைவர்கள் பாராட்டு

தீர்க்கமான தலைமையுடன், உலகளாவிய தெற்கின் நலன் குறித்த குரலை, ‘ஜி – 20’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரக்க வெளிப்படுத்தியதற்காக, பல்வேறு உலக தலைவர்களும் மனதார பாராட்டி உள்ளனர். இந்தியா தலைமை ஏற்று நடத்திய, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாடு நடத்தப்பட்ட விதம், அதில் விவாதிக்கபட்ட விஷயங்கள், உலக தலைவர்களால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட புதுடில்லி பிரகடனம் உள்ளிட்டவை குறித்து, ‘ஜி – 20’ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேசும்போது, ‘இந்தியாவின் தலைமையில், அதுவும் மிக முக்கியமான தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். ‘மாநாடு நடந்த பாரத் மண்டபத்தை வலம் வரும்போது, பிரதமர் மோடியின், ‘டிஜிட்டல்’ மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக, இந்தியாவின் மூலை முடுக்குகளில் வசிக்கும் மக்களுக்கு என்னென்ன சேவைகள் செய்ய முடியும் என்பது தெளிவாக புரிகிறது’ எனக் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ‘பிரதமர் மோடியின் சிறப்பான தலைமையில், கீழ் உருவாக்கப்பட்டுள்ள, ‘ஜி – 20′ நாடுகளின் ஒத்துழைப்பின் அடித்தளத்தை வரும் காலங்களில் மேலும் வலுவாக்க வேண்டும்’ என, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ஆகியோர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்ரிக்க யூனியனை ஜி – 20 உறுப்பினராக சேர்த்த முடிவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், ‘ஆப்ரிக்க யூனியன் மிக முக்கியமான கூட்டாளி. எங்களை பிரதமர் மோடி ஒன்றிணைத்துள்ளார். இது, சவால்களை ஒன்றாகச் சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது’ என, தெரிவித்ததாக மாநாட்டு அதிகாரிகள் கூறினர். உலகளாவிய தெற்கின் நலனுக்காக குரல் கொடுத்த மோடியை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வெகுவாக பாராட்டியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ”உலகின், ‘ஓர் எதிர்காலம்’ என்பது மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி விவாதிக்க நீங்கள் எங்களை இங்கு இணைத்தீர்கள். நாம் இங்கு செய்து முடித்துள்ளதை மக்கள் என்றும் நினைவில் கொள்வர்,” என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையே இருதரப்பு பேச்சு நடந்தது. அதன் பின், நம் வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கனடாவில் உள்ள தீவிரவாத சக்திகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதுடன், இந்திய துாதரக அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையை துாண்டுகின்றனர். துாதரக வளாகங்களை சேதப்படுத்துகின்றனர். இந்திய சமூகம் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர் என, கனடா பிரதமரிடம் மோடி வருத்தம் தெரிவித்தார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.