ஒரே நாடு, ஒரே தேர்தல் – ராமதாஸ் வரவேற்பு

‘ஒரே நாடு, ஒரே தேர்தலை வரவேற்கிறேன்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று, 85 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த அவர் கூறியதாவது: டெல்டாவில், குறுவை பல லட்சம் ஏக்கரில் பாசனம் பொய்த்து போகும் நிலையை, கர்நாடகா அரசு உருவாக்கியுள்ளது. தண்ணீரை பெற, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனாலும், கர்நாடகா அரசின் மனம் இளகவில்லை. சட்டம் நமக்கு துணையாக இருக்க வேண்டும். அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்கிறோம். நாம் வாழ்வதற்கு, சமூக நீதி தான் எல்லாவற்றுக்கும் சரியான பரிகாரம். பா.ம.க., வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். 39 தொகுதிகளிலும், பா.ம.க., வெல்லும் வாய்ப்புள்ளது. சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற, தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. தற்போது உள்ள இந்தியா பெயரே போதும். ஒரே நேரத்தில் சட்டசபைக்கும், லோக்சபாவுக்கும் தேர்தல் வரும் பட்சத்தில் செலவினம் குறையும். ஒரே நாடு, ஒரே தேர்தலை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தர்மபுரி மாவட்டம், கடத்துாரில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி, பா.ம.க., ஓட்டுச்சாவடி களப்பணியாளர் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியதாவது: காவிரி நீர் தருவது குறித்து, கர்நாடக முதல்வரை, தமிழக முதல்வர் சந்தித்து பேச வேண்டும். அப்போது தான், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் இல்லாததால், 5 லட்சம் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்கின்றனர். ‘சிப்காட்’டில் அதிக நிறுவனங்கள் வர வேண்டும். ‘ஜி – 20’ மாநாட்டை இந்தியா சிறப்பாக நடத்தி உள்ளது. இதற்கு பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி. லோக்சபா தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின், இந்தியா முழுதும் ஒரே சமயத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.