சனாதனத்தை எதிர்க்கும் ராஜா தி.மு.க., தலைவராக முடியுமா?

புதுச்சேரி, அரியாங்குப்பத்தில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற தி.மு.க., – எம்.பி., ராஜா பேசுகையில், ‘திராவிட இயக்கங்களால் தான் கவர்னராக தமிழிசை பதவி வகிக்கிறார்’ என, குறிப்பிட்டார். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது: நாங்கள் கடுமையாக படித்ததால் தான் முன்னேறியுள்ளோம். ஒருவர் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது, அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அவர்களை துாக்கி, மேலேவைத்தனர். ஆனால், நான் மருத்துவக் கல்லுாரியில் படித்தேன். என் முயற்சியால் வெளிநாடு சென்று படித்தேன். சனாதனம் குறித்த தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ராஜா எப்போதும் அப்படி தான் பேசுவார். இளைஞர்களுக்கு தவறான கருத்தை கொண்டு செல்கின்றனர். உதயநிதி, அது குறித்து எதுவும் தெரியாமல் பேசக்கூடாது. ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறை தான் சனாதனம். ஆனால், ஜாதி மட்டும் தான் சனாதனம் என்கின்றனர். ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால், எதற்கும் அதை கேட்கக் கூடாது. ஜாதி ரீதியாக ஒதுக்கீடு தரக்கூடாது; கோரவும் கூடாது. தி.மு.க.,வில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முதல்வர் பதவிக்கோ, கட்சி தலைவராகவோ வர முடியுமா? தி.மு.க., தலைவராக வருவதற்கு, ராஜாவால் தான் முடியுமா? தமிழகம் கல்வியில் உயர காமராஜர் போட்ட விதை தான் காரணம். ஆனால், தி.மு.க., எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.