”முக்கிய பதவி வகிக்கும் எனக்கே, இங்கு பாதுகாப்பு இல்லை. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது?” என, தென்காசியில் நடந்த தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்செல்வி ஆவேசமாக பேசினார். மணிப்பூர் சம்பவங்களை கண்டித்து, தென்காசியில் தி.மு.க., மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, திடீரென மேடையில் நின்று கொண்டிருந்த மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்செல்வி, ஆவேசமாக, ”எனக்கே பாதுகாப்பில்லை; மணிப்பூரை பற்றி பேசுகின்றனர்… மைக்கை என்னிடம் கொடுங்கள்; நான் பேச வேண்டும்,” என, மைக்கை வலுக்கட்டாயமாக வாங்கினார். அப்போது, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலர் சிவபத்மநாதன், ”நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்து பிறகு பேசிக் கொள்ளலாம்,” என்றார். இதற்கிடையே, மேடையின் கீழ் இருந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மைக்கை மாநில நிர்வாகியிடம் வழங்குமாறு தெரிவித்தார். அப்போது அவரை நோக்கி, மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்செல்வி, ”என்னை பற்றி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பகிரப்பட்டன. அவ்வாறு தவறான கருத்துகளை பதிவிட்டவர்களை தட்டிக் கேட்காத நிர்வாகிகள், மணிப்பூரை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது?” என, ஆவேசமாக கூறினார். தமிழ்செல்வியிடம் இருந்து மைக்கை வாங்கும் முயற்சியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதனால், சலசலப்பு, பரபரப்பு அதிகரித்தது. மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்செல்வியை, மேடையில் இருந்து அழைத்துச் செல்லும் முயற்சி நடந்தது. தொடர்ந்து, போலீசார் மூலம் அவரை அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார்.