விழுப்புரம் போல 100 மடங்கு மண் கொள்ளை

கடந்த 2006–2011 தி.மு.க., ஆட்சியின் போது, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததில், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2012ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.,யுமான கவுதம சிகாமணி மீது, அமலாக்கத்துறை இப்போது விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை, பல தரப்பிலும் வரவேற்கப்படுவதோடு, மண் கொள்ளையில் ஈடுபடுவோர், ஆதரவு தருவோருக்கான எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.விழுப்புரத்தை விட, 100 மடங்கு அதிகமாக கனிம வள கொள்ளை கோவையில் நடந்துள்ளதால், அதற்கு காரணமான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மீது, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரத்தில் ஒரே ஒரு வருவாய் கிராமத்தில், 10க்கும் குறைவான குவாரிகளில், 100 ஏக்கர் பரப்பளவிலான பகுதியில் பெறப்பட்ட அனுமதியை விட, அதிகளவில் விதிகளை மீறி மண் அள்ளப்பட்டுள்ளது.ஆனால், கோவை, தடாகம் பள்ளத்தாக்கில் ஐந்து வருவாய் கிராமங்களில், 806 குவாரிகளில், 4,500 ஏக்கருக்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பட்டா நிலங்களில், எந்த விதமான அனுமதியுமின்றி சட்ட விரோத செங்கல் சூளைகளால், 50 அடியிலிருந்து, 150 அடி ஆழம் வரையிலும், பல லட்சம் லோடு மண் அள்ளப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள இந்த பள்ளத்தாக்கு, விழுப்புரத்தை விட பல மடங்கு அதிகமான சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.இது தொடர்பாக, நம் நாளிதழில் வந்த தொடர் கட்டுரையை, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்காக பதிவு செய்து, பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

மொத்தம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு, மண் கொள்ளை நடந்துள்ளதாக, தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது.தீர்ப்பாய உத்தரவின்படி, கலெக்டர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, இழப்பீடு ஆய்வு செய்யப்பட்டது. அதிலும், 806 குவாரிகளில், 567 குவாரிகளில் மட்டுமே ஆய்வு செய்ய முடிந்ததாகவும், குழு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ஐந்து கிராம ஊராட்சிகளில், 177 செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்கி வந்ததாகவும், அந்த சூளைகளால், 373 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்புக்கு, 1 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 276 கன மீட்டர் அளவுக்கு மண் கொள்ளை நடந்துள்ளது. அதேபோன்று, 66 கோடியே 88 லட்சம் ரூபாய், சூழலியல் இழப்பு ஏற்பட்டுள்ளது; 806 குவாரிகளில், 565 குவாரிகளில் மட்டுமே இந்த ஆய்வு நடந்ததையும் ஒப்புக் கொண்டது. மற்ற பகுதிகளில் நடந்துள்ள மண் கொள்ளையை, நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்யவும் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதை அரசு செய்யவில்லை.

இப்போது, விழுப்புரத்தில் இரண்டு குவாரிகளில் நடந்த மண் கொள்ளையில் அரசுக்கான இழப்பு, 28 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், கோவையில் நடந்த மண் கொள்ளையில், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மண் கொள்ளை நடந்துள்ள, 20 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி காலமாகும். பொன்முடியின் ஊரான விழுப்புரத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகம் தான், 10 ஆண்டுகள் கனிம வளத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.மேலும், 2001 – 2021 வரையிலும், கோவையிலிருந்த பல அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் இந்த மண் கொள்ளைக்கு ஆதரவாக இருந்து, பல விதங்களிலும் பயன் பெற்றுள்ளனர். இப்போது ஐகோர்ட் உத்தரவால், 197 சூளைகள் மூடப்பட்டுள்ளன. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி, செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மண் கொள்ளைக்கு ஆதரவாக இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் யார் மீதும் எந்தநடவடிக்கையும் பாயவில்லை.அவர்கள் மீதும் பாரபட்சமின்றி, அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே, தமிழக மக்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும்!