பட்டாசு வெடித்த பா.ஜ.க நிர்வாகியை காலில் விழ வைத்த தி.மு.க., புள்ளி

அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதியில், வாளரக்குறிச்சி கிராமத்தில் பட்டியலின நபரை வெடி வெடித்த காரணத்திற்காக காலில் விழச் செய்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அன்பரசன் என்பவர் கூறியதாவது: வாளரக்குறிச்சியில், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த, 100 குடும்பங்கள் உள்ளன. அந்த இனத்தைச் சேர்ந்த நான், செந்துறை பா.ஜ., தெற்கு ஒன்றிய செயலராக உள்ளேன். எங்கள் கிராமத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க., ஆதரவாளர்கள். அந்த சமூகத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர், பாலயக்குடி ஊராட்சி செயலர், வாளரக்குறிச்சி தி.மு.க., கிளை செயலராக உள்ளார். என் மூத்த மகள் திவ்யஹரிணிக்கு, கடந்த 8ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்தினோம். அப்போது உறவினர்கள் சிலர் பட்டாசு வெடித்தனர். அதை கண்டதும், கண்ணன் கோபமடைந்து, பஞ்சாயத்தை கூட்டினார்; நாங்கள் மன்னிப்பு கேட்டோம். மறுநாள், என் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தபோது, சிலருடன் சேர்ந்து கண்ணன் வழிமறித்தார். பட்டாசு வெடித்தது குறித்து கேள்வி எழுப்பி, மோசமாக பேசினர்; திரும்பவும் மன்னிப்பு கேட்டேன்; ஆனால், விடவில்லை. இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில், கண்ணன் புகார் செய்தார்.

விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். ஸ்டேஷன் வாசலில் என்னையும், என் தம்பியையும் காலில் விழச் சொல்லி, கண்ணனும், அவருடன் இருந்தவர்களும் மிரட்டினர். அனைவரும் கூடியிருக்க, கண்ணன் மற்றும் அவருடன் இருந்தவர்களின் காலில் விழுந்து, என் தம்பி மன்னிப்பு கோரினார். அடுத்த நாள், அரியலுார் மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லாவை சந்தித்து, புகார் அளித்தேன். தற்போது, கண்ணன் உள்ளிட்டோர் மீது, வன்கொடுமை பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்; அவர்கள் தலைமறைவாகி விட்டனர். ஆளுங்கட்சிக்காரர் என்பதால், கண்ணனை தப்ப வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இரும்புலிக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ., செல்வகுமார் கூறியதாவது:பட்டாசு வெடித்தது தொடர்பாக, வாளரக்குறிச்சியில் இரு சமூகத்தவர்கள் இடையே பிரச்னை இருந்தது உண்மை. போலீஸ் நிலையத்துக்கு வந்து, இரு தரப்பும் சமாதானம் ஆகி விட்டதாக எழுதிக் கொடுத்தனர். அதற்கு பின், கண்ணன் தரப்பினர் மீது, எஸ்.பி.,யிடம் அன்பரசன் புகார் அளித்தது ஏன் என்று தெரியவில்லை. வெடி வெடித்ததற்காக, காலில் விழ வைத்து பிரச்னையை பெரிதாக்கி இருக்கக் கூடாது. புகார் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டது தெரிந்ததும், கண்ணன் தரப்பினர் தலைமறைவாகி விட்டனர். விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.