அரியலுார் மாவட்டம், முத்துசேர்வா மடம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் – -உமாபிரியா தம்பதியின் மகன் ஆகாஷ், 23. ப்ளஸ் 2 முடித்து பாலிடெக்னிக் படித்துள்ள அவர், காளையார் கோவிலில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, ராணுவத்தில் சேர பயிற்சி எடுத்து வந்தார். தடகள விளையாட்டுகளில் தீவிர பயிற்சி செய்து, மாநில அளவிலான போட்டிக்கு தயாரானார். இந்த ஆண்டு, தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கங்கள் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். பின்னர், ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், தங்கப் பதக்கம் வென்று, நேபாளத்தில் நடந்த சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றார். நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச தடகள ஸ்டேடியத்தில், இந்தோ நேபால் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு சார்பில் நடந்த சர்வதேச போட்டியில் பங்கேற்றார். போட்டிகளில் இந்தியா, நேபால், ஸ்ரீலங்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட, 10 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில், 20 முதல் -25 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று, மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றார். பதக்கம் வென்ற ஆகாஷ் நேற்று முன்தினம், ஆக்ராவில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு, நேற்று அரியலுார் ரயில் நிலையம் வந்தடைந்தார். பின்னர், பஸ்சில் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு, கிராம பொதுமக்கள் சார்பில், பட்டாசு வெடித்து, மாலை, சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்றுவதே வாழ்நாள் லட்சியம்’ என ஆகாஷ் தெரிவித்தார். மாநில, தேசிய, சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று, மூன்று தங்கப்பதக்கம் பெற்று திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.