பயங்கரவாதிகள் வீட்டில் வெடிக்காத குண்டுகள் பறிமுதல்

கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவரது வீட்டில் வெடிக்காத நான்கு கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய அளவில் நாச வேலைகளை நடத்த, மேலும் பலர் ஊடுருவியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், பெங்களூரு முழுதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மத்திய உளவுத் துறை எச்சரிக்கையை அடுத்து, பெங்களூரு சுல்தான் பாளையா பகுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த சையது சுஹைல், உமர், ஜனித், முதாசீர், ஜாகித் ஆகிய ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, ஏழு நாட்டு துப்பாக்கிகள், நான்கு வாக்கி டாக்கிகள், 45 தோட்டாக்கள், வெடிமருந்துகள், இரண்டு சாட்டிலைட் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஐந்து பேரையும் ஏழு நாட்கள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள், பெங்களூரில் பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது. கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இரண்டு உதவி கமிஷனர்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, மைசூரு, தாவணகெரேவில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், தாவணகெரேவில் பயாஜ் உல்லா, 30, என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். மைசூரிலும் ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், கைதான பயங்கரவாதி ஜாகித் தங்கியிருந்த ஹெப்பால் அருகேயுள்ள கோடிகேஹள்ளி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு சணல் பையில் பிளாஸ்டிக் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கையெறி குண்டுகள் இருந்தன. அதிர்ச்சி அடைந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் தவிர, மேலும் பல பயங்கரவாதிகள் பெங்களூரில் ஊடுருவி, பதுங்கியிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால், நகர் முழுதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், மெஜஸ்டிக் பஸ் நிலையம் உட்பட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணியரின் உடைமைகள், தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தலைமையில், உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின், அவர் அளித்த பேட்டி: கைதான பயங்கரவாதிகளிடம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படுகிறது. ஒருவர் தலைமறைவாக உள்ளார். வெடிக்காத கையெறி குண்டுகள் இருப்பதை அறிந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வந்து, அவை பறிமுதல் செய்யப்பட்டன. வேறு ஒரு பயங்கரவாதி, இவர்களுக்கு அதை வழங்கியுள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு, ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள லஷ்கர் -இ தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபடும் வகையில், கொஞ்சம் கொஞ்சமாக வெடி பொருட்களை சேகரித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது. தேவைப்பட்டால் மத்திய விசாரணை அமைப்புகளின் உதவியை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.