தனியார் நிறுவன கேன்டீன்களுக்கு 5 லிட்டர் பச்சை பால் பாக்கெட்

நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்க வேண்டிய பாலை, தனியார் நிறுவன கேன்டீன்களுக்கு, 5 லிட்டர் பாக்கெட்டில் அடைத்து, ஆவின் விற்பனை செய்வது, சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற போது, ஆவின் பால் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

அதன்படி பச்சை நிற பால் பாக்கெட், 500 மி.லி., 22 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த பால் பாக்கெட் வாயிலாக, ஆவினுக்கு தினமும், 8 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை குறைக்க, மார்ச் மாதம் ஏற்பாடு நடந்தது. தேர்தல் வாக்குறுதியை மீறி பால் பாக்கெட் விற்பனையை குறைப்பது குறித்து, செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, வழக்கம்போல பால் பாக்கெட் உற்பத்தி செய்ய, அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை குறைக்க, மீண்டும் ஏற்பாடு நடக்கிறது. ‘அன்றன்று கொள்முதல் செய்யும் பால் பாக்கெட் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே, இனிவரும் நாட்களில் வழங்கப்படும். எனவே கொள்முதல் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்’ என, பாலகங்களுக்கு ஆவின் அதிகாரிகள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எண்ணிக்கையை கூட்ட முடியாது; குறைக்க மட்டுமே முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் நிறுவன கேன்டீன்களுக்கு மொத்தமாக பச்சை நிற பால், 5 லிட்டர் பாக்கெட்டில் அடைத்து இரவில் சப்ளை செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்களிடம், விற்பனை விலையில் பாலுக்கான பில் வசூலிக்கப்படுகிறது. பாலுக்கு வழங்கும் கமிஷனை, ஏஜன்ட்களுடன், துறையின் முக்கியப்புள்ளி முதல், ஆவின் அதிகாரிகள் வரை பங்கிட்டு கொள்கின்றனர்.

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை நாட்களில், தனியார் நிறுவனங்கள், பல லட்சம் ரூபாய்க்கு ஆவின் இனிப்புகளை வாங்குவதால், அவர்களுக்கு மலிவு விலை பால் வழங்குவதாக, ஆவின் அதிகாரிகள், அரசிடம் விளக்கம் அளித்துள்ளனர். இது நுகர்வோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.