தடை செய்யப்பட்ட அமைப்புகள் மீண்டும் தலைதூக்க முயற்சி

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், வேறு பெயரில் தலைதுாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா, தமிழகம் என, இந்தியா முழுதும் செயல்பட்டு வந்த, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ என்ற அமைப்பு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது. அதன் அடிப்படையில், மத்திய அரசு, 2022ல், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்தது. அத்துடன், அதன் கிளை அமைப்புகளான, ‘கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா, அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில், தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் பிரன்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன்’ என்ற அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் நிர்வாகிகளது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்; நிர்வாகிகளையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்பினர் மற்றும் அதன் உறுப்பினர்கள், மீண்டும் வேறு பெயரில் இயங்கும் வகையில், ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுவதை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘எங்களுக்கு சில நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் வாயிலாக, ரகசிய விசாரணை நடத்தி, ஆதாரங்களை திரட்டி வருகிறோம். தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர்’ என்று எச்சரித்து உள்ளனர்.