ஓ.பி.சி., மற்றும் தலித் ஆதரவைப் பெற பா.ஜ., வியூகம்!

காங்கிரஸ் மற்றும் பல்வேறு மாநில கட்சிகளை ஒன்றிணைத்து, பா.ஜ.,வுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையே, ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து, அவர்களது ஓட்டுகளை பெறுவதற்கான முயற்சியில் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்காக ஜாதிவாரி மக்கள் தொகை கண்கெடுப்பை நடத்த அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பா.ஜ., அரசு மவுனம் காத்து வருவதை அடுத்து, அக்கட்சியை ஓ.பி.சி., பிரிவினருக்கு எதிராகவும் அவர்கள் சித்தரிக்க துவங்கி உள்ளனர். இதற்கான பதிலடிகளை பல்வேறு அதிரடி நடவடிக்கை வாயிலாக பா.ஜ., அரசு திருப்பி அளிக்கத் துவங்கி உள்ளது. அந்த வகையில், எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஓ.பி.சி., மற்றும் தலித் மக்களின் ஆதரவு பெற்ற சிறிய கட்சிகளை, தே.ஜ., கூட்டணியில் இணைக்கும் முயற்சியை பா.ஜ., தலைமை தீவிரப்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுகல்தேவ் பாரதிய சமாஜ் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், தே.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளது, பா.ஜ.,வின் அஸ்திரங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில், குர்மி இன மக்களின் ஆதரவு பெற்ற அப்னா தளம் சோனிலால் பிரிவை சேர்ந்த அனுப்ரியா படேல், 2014 முதலே, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். தற்போது மத்திய அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

அதேபோல, படகோட்டிகள் மற்றும் மீனவர்கள் ஆதரவு பெற்ற, நிஷாத் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் நிஷாத், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக தே.ஜ., கூட்டணியில் இணைந்தார். இந்த நகர்வுகளின் அடுத்த கட்டமாகத் தான், ஓ.பி.சி., சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஓம் பிரகாஷ் ராஜ்பரை, பா.ஜ., தங்கள் வசம் இழுத்துள்ளது. மேலும், 2022 உ.பி., சட்டசபை தேர்தலின் போது சமாஜ்வாதி கூட்டணியில், ராஷ்ட்ரீய லோக் தளம் இடம் பெற்றதால், ஜாட் சமூகத்தினரின் ஓட்டுகளை மேற்கு உ.பி.,யில் பா.ஜ., இழந்தது. இம்முறை, அக்கட்சி தலைவர் ஜெயந்த் சிங்கை தே.ஜ., கூட்டணியில் இணைக்கும் முயற்சி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன் வாயிலாக, உ.பி.,யில் உள்ள 80 லோக்சபா தொகுதிகளையும் இம்முறை கைப்பற்ற பா.ஜ., உறுதியுடன் இருப்பது தெரிய வருகிறது. கடந்த 2022 உ.பி., சட்டசபை தேர்தலின் போது, அம்மாநிலத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் பா.ஜ., இழந்த தலித் ஓட்டுகளை ஓம் பிரகாஷ் ராஜ்பரும், அப்னா தளம் கட்சியும் இம்முறை பெற்றுத்தரும் என பா.ஜ., தலைமை உறுதியாக நம்புகிறது.

பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் – ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் அங்கம் வகித்த தலித் தலைவர்களான உபேந்திர குஷ்வஹா மற்றும் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி ஆகியோரை, தே.ஜ., கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடந்தன. இதில், ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மன்ஜி, தே.ஜ., கூட்டணியில் ஏற்கனவே இணைந்துவிட்டார். உபேந்திர குஷ்வஹா விரைவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, பஸ்வான் பிரிவைச் சேர்ந்த தலித் மக்களின் ஆதரவு பெற்ற, லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வானை மீண்டும் தே.ஜ., கூட்டணிக்குள் இழுக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அவரும், பா.ஜ., மூத்த தலைவர்களை சந்தித்து பல்வேறு சுற்று பேச்சு நடத்தி முடித்துள்ளார். பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற இரு பெரும் எதிர்க்கட்சிகளை சமாளிக்க, பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் ஆதரவுள்ள பல சிறிய ஜாதி கட்சிகளை, தே.ஜ., கூட்டணியில் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது.