பொது சிவில் சட்டம்; 46 லட்சம் பேர் கருத்து

பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் 46 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், மதம், ஜாதி, இன அடிப்படையில் தனிப்பட்ட சட்டங்களை பின்பற்றாமல், அனைவருக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வரும் முயற்சியாக, பொது சிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பொது மக்கள், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள் உள்ளிட்டோரின் கருத்தை கேட்கும் பணியை 22வது மத்திய சட்ட கமிஷன் கடந்த மாதம் துவங்கியது. இன்னும் ஓரிரு நாட்களில் கருத்துக் கேட்பு பணி முடிவுக்கு வர உள்ளது.இந்நிலையில், பல்வேறு தரப்பை சேர்ந்த 46 லட்சம் பேர் கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும், சில குறிப்பிட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்களை அழைத்து அவர்களிடமும் கருத்துக்களை கேட்க சட்ட கமிஷன் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அழைப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.