தமிழக ஆளுநருருக்கு மரியாதையே இல்லாத சூழலை திமுக உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவதாக விமர்சித்துள்ளார். கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவர் ஜீவ்நாத், இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் கடந்த ஜூன் மாதம் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், ஜீவ்நாத்தின் இல்லத்துக்கு நேற்று சென்ற அண்ணாமலை, அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
முன்னதாக, கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இல்லாத பிரச்சினைகளுக்கு எல்லாம் ஆளுநர்தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன? திமுக செய்ய வேண்டிய வேலை எவ்வளவு இருக்கிறது? நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கிறார் முதல்வர்.
ஆளுநர், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்று முதல்வர் சொல்கிறார். அதேவேளையில் எதற்காக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்? அதற்கு பதில் இல்லை.
தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க, ஆளுநரை வில்லனாக காட்டுவதை எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்? கள்ளச்சாராய உயிரிழப்பு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்போது எதற்காக ஆளுநர் மீது அனைத்து பழிகளும் போடப்படுகின்றன. ஆளுநருக்கு மரியாதையே இல்லாத சூழலை திமுக உருவாக்கியுள்ளது.
இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. முதல்வர் அனுப்பிய கடிதம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தமிழகத்தின் உண்மையான நிலைமையை பிரதிபலிப்பதாக அந்த கடிதம் இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் முதல்வரிடத்தில் தெரிகிறது. முதல்வரின் கடிதத்தில் அவரது இயலாமைதான் வெளிப்படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.