‘தி.மு.க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைத் தரக்குறைவாக ஒருமையில் பேசுகின்றனர். தமிழகத்தில் கவர்னருக்கு மரியாதையே இல்லாத சூழல் நிலவுகிறது’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் கவர்னரைப் பற்றி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ஒரு கண்ணாடியைப் பார்த்து முதல்வர் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாத பிரச்னைகளுக்கு எல்லாம் கவர்னர்தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது.
தமிழகத்தில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன, தி.மு.க அரசு மீது எவ்வளவு அதிருப்தி இருக்கின்றன, தி.மு.க செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கின்றன. நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இவற்றை விட்டுவிட்டு கவர்னரைச் சீண்டிப் பார்க்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கவர்னர் நீக்கியது தவறு என்று சொல்கின்றனர். அது தவறு என்றால், எதற்காக இவர் (ஸ்டாலின்) எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கவர்னரிடம், ‘அ.தி.மு.க அமைச்சர்களை நீக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
செந்தில் பாலாஜியைப் பாதுகாத்து உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். அந்தக் கடிதத்தைப் படிக்கும்போது, செந்தில் பாலாஜியை ஓர் உத்தமராகவும், புத்தராகவும், மாநிலத்தைக் காக்க வந்த சேவகாராகும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க கவர்னர் மீது குற்றசாட்டுகளைக் கூறுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும். தமிழகத்தில் இருக்கக்கூடிய தி.மு.க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைத் தரக்குறைவாக ஒருமையில் பேசுகின்றனர்.
தமிழகத்தில் கவர்னருக்கு மரியாதையே இல்லாத சூழல் நிலவுகிறது. இவர்கள் கொடுப்பதை மட்டுமே கவர்னர் படிக்க வேண்டும் என எந்தச் சட்டமும் இல்லை. எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் கவர்னர் படிக்காமல் இருந்திருக்கிறார்.
2024 பார்லிமென்ட் தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பா.ஜ., 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். முதல்வரின் கடிதத்தில் அவரின் இயலாமைதான் வெளிப்படுகிறது. கவர்னருக்கு ஜி.யு.போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததில் மாறுபட்ட கருத்து இருக்கிறது.
கவர்னர் அரசியல் பேசக் கூடாது. ஆனால், ஜி.யு.போப் குறித்து சொந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். கலாசாரத்தைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி கவர்னருக்குப் பேச உரிமை இருக்கிறது. கவர்னர் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.