ராகுலின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின், மோடி சமுதாயம் குறித்த அவதூறு கருத்திற்கான சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. 2019 தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலார் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “அது எப்படி எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று இருக்கிறது” என்று பேசினார்.

மோடி என்ற சமுதாயத்தின்  பெயரை வேண்டுமென்றே தவறாகப் பேசியுள்ளார் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ பூர்நேஷ் ஈஸ்வர்பாய் மோடி என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் செஷன்ஸ் நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சூரத் செஷன்ஸ் நீதி மன்றம் மார்ச் 23 அன்று ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்தது.

அத்தண்டனையின் விளைவாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறி போனது. அதை எதிர்த்து அவர் இதுவரை நீதிமன்றம் செல்லவில்லை. 2 வருட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.  சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக் குறிப்பிட்டு நீதிபதி ஹெமந்த் பிரச்சாக் அவரது மனுவைத் தள்ளுபடி செய்தார்.  இத்தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யக் கூடும் என்று தெரிகிறது.