காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக விவசாயிகள் கோரிக்கை

ஜூன், ஜூலை மாதங்களுக்கான 43 டிஎம்சி தண்ணீரை விடுவித்து தமிழகத்தில் கருகும் பயிரை காப்பாற்ற, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, இப்பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கி விட்டன. இதற்கு தமிழகத்திற்கு மாதாந்திர அடிப்படையில் கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்காததே காரணம். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, தேவையில்லாத நாட்களில் கர்நாடகம் தண்ணீரை விடுவித்து அணையை காலி செய்துவைத்துள்ளதாகவும் தமிழக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் சுமித்ரா குமார்ஹல்தரிடம், தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். அதில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிபெய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில் இருந்து43 டிஎம்சி தண்ணீரை பெற்றுத்தந்து கருகும் பயிரை காப்பாற்ற அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆணையம் சார்பில் தமிழகத்தின் காவிரி டெல்டாவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதவாது: மேட்டூர் அணையில் 48 டிஎம்சி தண்ணீர் உள்ள நிலையில் பாதிப்புகள் தீவிரம் அடைந்துள்ளது ஏன் என ஆணையத்தின் தலைவர் ஹல்தர் எங்களிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு அவரிடம் நான்விரிவானப் பதில் அளித்தேன். ‘‘அணையில் சுமார் 30 அடி உயரத்துக்கு மண் குவிந்துள்ளதால், தண்ணீர் கொள்ளளவு குறைவாக இருப்பதாகவும், இது ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. எனவே கர்நாடகம் தண்ணீரை திறக்காவிட்டால் அணையில் இருந்து எடுக்கும் கூடுதல் நீர் போதுமானதாக இருக்காது. அணையில் அவசர குடிநீர் தேவையை கருதி குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும்’’ என எடுத்துரைத்ததாக பாண்டியன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தமிழக விவசாயிகளிடம் ஆணையத்தின் தலைவர் ஹல்தர் மேலும் பல கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.அதில், ஒவ்வொரு வருடமும் நீர்பற்றாக்குறையை சமாளிக்க நெல்லிற்கு பதிலாகச் சிறுதானியங்கள் பயிரிடலாமே? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குதமிழகத்தில் அரிசியின் தேவை அதிகமாக இருப்பதால் நெல்லையே பயிரிட வேண்டியதாகி உள்ளதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, மத்திய அரசு நீர்வளத்துறை ஆணைய செயலாளர். வேளாண் வல்லுநர், நீரியல் துறை வல்லுனர் சார்ந்த ஆணைய உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.