“தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இளங்கோவனை 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். இவரது தேர்தலை எதிர்த்து, அந்த தொகுதியின் வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ரவீந்திரநாத் வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்து உள்ளதாகவும், தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதனை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். ரவீந்திரநாத், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர். வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
வழக்கு தொடர்பாக சில விபரங்களை நீதிபதி கேட்டிருந்தார். அதற்கு, வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி ரவீந்திரநாத் தரப்பில் கோரப்பட்டது.இதையடுத்து, விசாரணையை வரும் 28க்கு தள்ளி வைத்து, அன்று ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த ஜூன் 28 ம் தேதி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்து வாக்குமூலம் அளித்தார். மிலானி தரப்பு வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதில் அளித்தார்.
அப்போது, சொத்து விவரங்களுக்கு முறையாக கணக்கு காட்டாதது, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வழங்கிய தீர்ப்பில், ‘ரவீந்திரநாத் வெற்றி செல்லாது’ என தீர்ப்பு வழங்கினார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என ஒவீந்திரநாத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.