தமிழக சட்டசபைக்கு, 2021ல் பொது தேர்தல் நடந்தது. தென்காசி தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் பழனி நாடார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க., சார்பில் செல்வ மோகன்தாஸ் என்பவர் போட்டியிட்டார்.
இருவருக்கும் இடையே ஓட்டு வித்தியாசம், 370. காங்கிரஸ் எம்.எல்.ஏ., பழனி நாடார் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் செல்வ மோகன்தாஸ், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கைக்கும், முடிவில் அறிவிக்கப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது; தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் விதிகள் மீறப்பட்டன. தபால் ஓட்டுகளை முறையற்ற வகையில் நிராகரித்துள்ளனர்; அதனால், மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.
இவ்வழக்கை, நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அ.தி.மு.க., வேட்பாளர் சார்பில், மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜன், வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவத்சவா, எம்.எல்.ஏ., சார்பில், வழக்கறிஞர் வி.அருண் ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தென்காசி தொகுதியில் தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண, 10 நாட்களுக்குள் ஒரு அதிகாரியை, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் நியமிக்க வேண்டும். ‘வழக்கு செலவுத் தொகையாக 10,000 ரூபாயை மனுதாரருக்கு, அப்போது இருந்த தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும்’ என, கூறியுள்ளார்.