விண்வெளித் துறையில் இந்தியா பெற்று வரும் அபரிமிதமான சாதனைகள் வியக்கத்தக்கவை. இந்த உலகையும், விண்வெளியையும் இணைப்பதில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி பிரமாண்டமானது என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து வெளியாகும் த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, வழக்கமாக, இந்தியாவுக்கு எதிரான கொள்கையைக் கொண்டது. இந்தியா குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் விண்வெளி வளர்ச்சி குறித்து பெரிதும் பாராட்டி, அந்தப் பத்திரிகை அபூர்வமாக கட்டுரை வெளியிட்டுள்ளது.இதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 1963ல் இந்தியா தன் முதல் ராக்கெட்டை ஏவியது. அப்போது மிகவும் சிக்கலான ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா போன்ற ஏழை நாடுகள் எப்படி சாதிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. முதல் ராக்கெட்டின் பாகங்களை விஞ்ஞானிகள் சைக்கிள்களில் வைத்து எடுத்துச் சென்றனர். பூமியில் இருந்து, 200 கி.மீ., உயரத்தில்தான் இந்தியாவின் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. அப்போது விண்வெளி துறையில் அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு ஒரு போட்டியாக இந்தியா இருக்க முடியாது என கூறப்பட்டது. ஆனால், தற்போது விண்வெளித் துறையில் இந்தியா மிக ஆழமாக தன் தடத்தை பதித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய போது 2020ல் விண்வெளி துறையில் அதிக நிறுவனங்கள் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அப்போது, வெறும் நான்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. மிகவும் சிக்கலான தொழில்நுட்பங்களை உடைய விண்வெளித் துறையில், இந்தியாவில், தற்போது, 140க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்த பிரமாண்ட வளர்ச்சி, விண்வெளி துறையில் இந்தியாவின் திறமைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வந்திருந்தார். அப்போது அதிபர் ஜோ பைடனுடன் நடத்திய பேச்சில், விண்வெளி துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இது மிகச் சிறந்த நடவடிக்கையாகும். தன் தேவைக்காக மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்காகவும் விண்கலங்களை அனுப்பும் தொழில்தான், எதிர்காலத்தில் செழிப்புடன் இருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் இதில் இணைந்து செயல்படுவது, பொது எதிரியான சீனாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.தற்போதுள்ள புவி அரசியல் நிலவரம், இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. இந்த நேரத்தில், விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகளை இந்தியா மிக சரியாக பயன்படுத்தி கொள்கிறது. விண்வெளித் துறையில், இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பது, உலகின் எதிர்காலத் தேவையை இந்தியா சரியாக புரிந்து கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது. இந்த உலகையும், விண்வெளியையும் இணைப்பதில், மிகப் பெரும் அறிவியல் சக்தியாக இந்தியா விளங்கும். அதற்கு இரு நாடுகளின் கூட்டணி, அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.