வெளிநாட்டினரை வேவு பாருங்கள்; தமிழக அரசை உசுப்பும் மத்திய அரசு

இந்தியாவுக்குள் ஊடுருவி ரகசியமாக செயல்படும் வெளிநாட்டினரை வேவு பார்க்கும் பணியில், மத்திய உளவு துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, அத்துறையில் உள்ள எதிர் உளவு பார்த்தல் பிரிவு, தினமும் 24 மணி நேரமும் பணியாற்றி, தொடர்ந்து தகவல் சேகரித்து அளிக்கிறது. அவர்கள் கொடுக்கும் தகவல்கள் தான் மாநிலங்களுக்கு, ‘அலர்ட்’ செய்தியாக அனுப்பப்படுகின்றன. தமிழக உளவு துறையிலும், இப்பணிகளை பார்க்க, எதிர் உளவு பார்த்தல் பிரிவு உண்டு. ஆனால், அந்த பிரிவு பெயருக்கு தான் உள்ளது. அதை வலுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு, தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து, மத்திய உளவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளிநாட்டினரை கண்காணிக்கும் பணியில், மத்திய உளவு துறை தீவிரமாக இருப்பதால், மாநில உளவு துறை போலீசார், தீவிர கவனம் செலுத்துவதில்லை. தமிழக உளவு துறையில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பிரிவு உள்ளது. அதன் கீழ், எதிர் உளவு பார்த்தல் என்ற பெயரில், ஒரு சிறிய பிரிவு செயல்படுகிறது; அது போதுமானதாக இல்லை. இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் துாதரக அதிகாரிகள், அமீர் சுபைர் சித்திக், பாஷா, முகம்மது சாகிர் உசேன், தமீம் அன்சாரி, சிவபாலன், அருண் செல்வராஜ் போன்றவர்களை, தமிழகத்தில் ஊடுருவ செய்தனர்.

அவர்கள், இந்தியாவின் பாதுகாப்பு கேந்திரம், சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் துாதரகத்தை தாக்க முற்பட்டனர். இதை உளவு அறிந்ததன் வாயிலாக விபரீதம் தடுக்கப்பட்டது. அவர்கள், இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களை தகர்க்கவும் திட்டமிட்டிருந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த முகமது யூனுஸ், இலங்கையில் இருந்து கள்ளத் தோணி வாயிலாக, ராமநாதபுரம் வந்தார். பல இடங்களில் சுற்றி திரிந்தார். மத்திய உளவு துறையினர், அவரை கண்காணித்ததால் பிடிபட்டார்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஜோனாதன் என்ற போதை பொருள் கடத்தல் வியாபாரி, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கள்ளத் தோணியில் செல்ல முற்பட்டார். மத்திய உளவு துறை கண்காணித்து, உஷார்படுத்தியதும் கைது செய்யப்பட்டார். பாஸ்போர்ட், விசா இல்லாமல், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து, குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கான முகாம், திருச்சியில் உள்ளது. அங்கிருந்து, பல்கேரியா நாட்டை சேர்ந்த இலியன் ஜெட்ரொகோவ் மார்கோவ் என்பவர் தப்பி ஓடினார். அவரை பற்றி, மத்திய உளவுத் துறை பல நாடுகளிலும் விசாரித்து வருகிறது.

கோவையில் தங்கி சந்தேகப்படும் வகையில் செயல்பட்டதாக, சீன பத்திரிகையாளர் மோ ஷிஹி என்பவர் போலீசில் பிடிபட்டார். அவர் பற்றிய உண்மையான தகவல்களை அளித்து, அவரை எச்சரித்து, மத்திய உளவுத் துறையினர் அனுப்பி வைத்தனர். நேகோட்டியா ஸ்டிபன் மாரியஸ் என்பவர், ரோமானிய நாட்டவர். விசா விதிமுறைகளை மீறி, கோவையில் தேர்தல் பிரசாரம் செய்தார். மத்திய உளவு துறையினர், இந்த தகவலை மாநில போலீசாருக்கு அனுப்பினர். தீவிர விசாரணைக்கு பின், அந்த நபர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

வெளிநாட்டில் இருந்து வரும் பத்திரிகையாளர்கள், மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக வருவோர், இங்கு வந்து மத பிரசாரம் மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதால், அவர்களை மத்திய உளவு துறையினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை நாட்டினர், பாகிஸ்தானில் உள்ள போதை பொருள் கடத்தல் ஆசாமிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து இலங்கை வழியாக, மேற்கத்திய நாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதை, மத்திய உளவு துறை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாட்டினர் செயல்பாடுகள் இப்படி இருப்பதால், அவர்களை தீவிரமாக கண்காணிக்க, மாநில உளவுத் துறையின் எதிர் உளவு பார்த்தல் பிரிவு முடுக்கி விடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.