விளம்பரத்துக்கான செலவு எவ்வளவு? புதுடில்லி அரசுக்கு கோர்ட் கேள்வி

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு புதுடில்லியை ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுடன் இணைக்கும் வகையிலான பிராந்திய அளவிலான அதிவேக ரயில் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கான செலவை மத்திய அரசு மற்றும் புதுடில்லி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்கள் பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் புதுடில்லி அரசின் பங்காக, 265 கோடி ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புதுடில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மாநில அரசிடம் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. ‘இதனால் ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு தேவையான நிதியை கொடுக்க முடியவில்லை’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: போக்குவரத்து திட்டத்துக்கு நிதி கொடுக்க முடியவில்லை என கூறுகிறீர்கள். நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறுகிறீர்கள். அப்படியானால், கடந்த மூன்று ஆண்டுகளில் விளம்பரத்துக்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விபரத்தை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விளம்பரத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை, ரயில் போக்குவரத்துக்காக திருப்பிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.