மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி

ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அப்போது 849 மதுபான கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதே வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் கடந்த மார்ச் 9-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

இதில் சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.

இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சிசோடியா தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா நேற்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதே வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அபிஷேக், ஆம் ஆத்மி மூத்த தலைவர் விஜய் நாயர், பெர்னான்ட் ரிச்சர்ட் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் பினாய் பாபு ஆகியோரும் ஜாமீன்கோரி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களையும் நீதிபதி தினேஷ் குமார் சர்மா தள்ளுபடி செய்தார்.

‘‘சில வெளிநபர்களின் ஆலோசனைகளின்படி மதுபான கொள்கையை மணிஷ் சிசோடியா வரையறுத்துள்ளார். அவர் மீதான பண மோசடி குற்றச்சாட்டு மிகதீவிரமானது. எனவே சிசோடியாஉள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை
தள்ளுபடி செய்கிறேன்’’ என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.