மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் பயன்பாடுக்கு வரும்

கடந்த, 1969-ல் காமராஜர் குமரி மண்ணில் போட்டியிட்ட போது, பிரச்சாரத்திற்கு வந்த கருணாநிதி, நாடார் சமூகத்தை ஹிந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என, பிரித்தார். காமராஜர் வெற்றி பெற்றார். அப்போது, கருணாநிதி, ‘நடந்தது நாடாளுமன்ற தேர்தல் அல்ல; நாடார் மன்ற தேர்தல்’ என்றார். பின், 1971-ல் தேர்தல் பிரசாரத்துக்கு கருணாநிதி குமரி வரவில்லை. ‘நெல்லை எங்கள் எல்லை; குமரி எங்கள் தொல்லை’ என்றார்.

இங்கு பிரசாரத்துக்கு வந்த மோடி, குமரி மாவட்டத்தை தன் சொந்த மாவட்டமாக பாவித்தார். மீனவர்கள் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது. மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கியவர் பிரதமர் மோடி. இணை அமைச்சராக எல்.முருகனை நியமித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். தமிழகத்தில், மீனவ சொந்தங்களுக்கு மீன் விவசாயி என பிரதமர் பெயர் வைத்துள்ளார். மொத்தம், 33 லட்சம் மீன் விவசாயிகளுக்கு கிசான் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக எந்த துப்பாக்கி சூடும் நடக்கவில்லை. மீனவர்கள் ஆழ்கடல் செல்லும் போது, உங்கள் படகில் மோடி அமர்ந்திருக்கிறார் என, நினைக்க வேண்டும்.

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என, தி.மு.க. சொன்னது. இந்த செங்கல் தான், 2 லட்சம் வீடு. உடனே எய்ம்ஸ் பற்றி பேசுவர். டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று கட்ட திட்டமிட்டுள்ளோம். மதுரை எய்ம்ஸ், 2026 மார்ச்சில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். உங்கள் தேர்தல் வாக்குறுதியில், மதுரையில் வேளாண் பல்கலை வாக்குறுதி என்ன ஆனது. வேளாண் பல்கலை செங்கல்லாக தான் இருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் இந்த அரசு செயல்படுத்தாததால் அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை கைது செய்த ஐந்து நிமிடத்தில், ஐந்து அடைப்பு வருகிறது. இப்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சங்கீதா இட்லி போகிறது. ஒரு ஊழல்வாதியை பாதுகாக்க ஸ்டாலின் அரசு போலீசை பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து விட்டது என, சரத்பவார் பேட்டி கொடுத்த பத்து நாட்களில் அவரது, 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ,வில் சேர்ந்து விட்டனர். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சொல்லி விட்டார். இதற்கு தி.மு.க., கூட்டணி கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? வரும் தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ., வெல்லும். பொது சிவில் சட்டம் வரும். அந்த சட்டத்தால் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகமாக பயன் பெறுவர். கொரோனா காலத்தில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ நடத்துவதற்கு மட்டும் அமைச்சர் மனோ தங்கராஜ், 2.55 கோடி ரூபாய் செலவு எழுதியுள்ளார். இப்போது பால்வளத்துக்கு சென்றுள்ளார். கன்னியாகுமரியில் வெற்றி பெறுபவர் நிச்சயமாக மத்தியில் கேபினட் அந்தஸ்து பெறுவார். இவ்வாறு அவர் பேசினார்.